Home மாவட்டங்கள் சென்னை வேலைநிறுத்தத்தால் வெறிச்சோடிய காசிமேடு மீன் சந்தை

வேலைநிறுத்தத்தால் வெறிச்சோடிய காசிமேடு மீன் சந்தை

சென்னை, நவ. 22-
ஆந்திர மாநில கடலோரப் பகுதியில் சிறைபிடிக்கப்பட்ட சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 8 விசைப்படகுகளையும் உடனடியாக மீட்க வேண்டும். ‘முரசு’ புயலில் சிக்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதுடன், அந்தக் குடும்பங்களில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காசிமேடு மீன்பிடித் துறைமுக வளாகத்தில் மீனவர்கள் கருப்புக்கொடி கட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் மீனவர்கள் நடத்தி வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் 4-வது நாளாகவும் தொடர்கிறது. இதனால், காசிமேடு மீன் சந்தை வெறிச்சோடிக் காணப்படுகிறது. மீன்கள் வரத்து பெருமளவில் குறைந்துள்ள நிலையில், ஏற்கெனவே பிடித்து வைக்கப்பட்டிருந்த மீன்களைப் பயன்படுத்தி பெண்கள் விற்பனை செய்து வருகின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் காசிமேடு மீன் சந்தை, போராட்டம் காரணமாக இன்று ஆள் நடமாட்டமின்றிக் காணப்பட்டது. மீன்பிடிப் படகுகள் கடலுக்குச் செல்லாததால், தினசரி சுமார் 100 டன் கடல் உணவு வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீன் விலை 50 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது. காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீன் விற்பனை மட்டுமின்றி, வழக்கமான சந்தை நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.