
புதுடெல்லி, செப். 22-
கட்டுமானத் தளங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடர்பாக, மத்திய அரசு மற்றும் ஹரியானா அரசிடம் பதில் கோரி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள ‘சிக்னேச்சர் குளோபல் சிட்டி’ கட்டுமானத் தளத்தில் சுவர் மற்றும் மண் சரிந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தைத் தொடர்ந்து, கட்டுமானத் தளங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி மற்றும் வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அமர்வு, இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் ஹரியானா அரசு பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.















