
சென்னை, செப். 19- தவெக அரசின் சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரில் தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம் உட்பட 13 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் 12 மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் ஒப்புதல் அளித்துள்ளார்.தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த மே 11 முதல் 13-ம் தேதி வரையும், ஜூன் 18 முதல் 23-ம் தேதி வரையும் நடைபெற்றது.
2-வது கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5 முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடந்தது. இதில் ஆளுநர் உரையும், பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகளும் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றின் மீதான விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவையில் 13 மசோதாக்களும், 9 அரசினர் தனித் தீர்மானங்களும் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டன. வேளாண் விளைபொருட்களைச் சந்தைப்படுத்தும் மண்டி உரிமத்தின் செல்லுபடியாகும் காலத்தை 5 ஆண்டுகளாக நீட்டித்தல்,
டிஎன்பிஎஸ்சி கூடுதல் செயல் பணிகள் திருத்தச் சட்டம், தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் திருத்தச் சட்டம், டாஸ்மாக் மதுபானங்களுக்கு மதிப்புக் கூட்டு வரி, தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டம், நகர் ஊரமைப்பு மற்றும் திட்டமிடல் திருத்தச் சட்டம், தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்தச் சட்டம், ஜிஎஸ்டி வரி திருத்தச் சட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும். மேலும், தமிழகத்தின் 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக நியமிக்கப்பட்ட தனி அலுவலர்களின் பதவிக் கால நீட்டிப்பும் நிறைவேற்றப்பட்டது.













