
சென்னை, அக். 28-
தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்குப் பின் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்றிரவு வெளியிட்டது.
புதிய கட்டண விதிகளின்படி, முதல் 1.8 கிலோமீட்டர் தூரத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும். தமிழகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்டில் ஆட்டோ கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. அப்போது, முதல் 1.8 கிலோமீட்டர் தூரத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.25-ம், அதற்கு மேல் செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ரூ.12-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. அதன்பிறகு கட்டணத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. பெட்ரோல் விலை உயர்வு, காப்பீட்டுக் கட்டணம் அதிகரிப்பு, வாகனப் பராமரிப்புச் செலவு மற்றும் உதிரிபாகங்களின் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால், ஆட்டோ கட்டணத்தை உயர்த்த வேண்டும் என ஓட்டுநர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். எனினும், இதுதொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கிடையே, ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் நலன்களை சமநிலைப்படுத்தும் வகையில் ஆட்டோ கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம், 2022 பிப்ரவரியில் தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கங்களின் தொடர் கோரிக்கைகளையடுத்து, தற்போது 13 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டண மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.














