Home செய்திகள் தேசிய செய்திகள் 17 ஆயிரம் அடி உயரத்தில் இண்டிகோ விமானத்தில் மின்னல்

17 ஆயிரம் அடி உயரத்தில் இண்டிகோ விமானத்தில் மின்னல்

லக்னோ, அக். 8-
மோசமான வானிலைக்கு மத்தியில், பாட்னாவிலிருந்து லக்னோ நோக்கி 104 பயணிகளுடன் புறப்பட்ட இண்டிகோ விமானம், 17 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்குதலுக்கு உள்ளானது. இதில் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்தது. இருப்பினும், விமானி சாதுர்யமாக செயல்பட்டு விமானத்தை லக்னோ விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கினார். விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த விமானம் நேற்று பிற்பகல் 3.10 மணியளவில் பாட்னாவிலிருந்து புறப்பட்டது. மாலை 4.20 மணிக்கு லக்னோவை சென்றடையும் வகையில் பயணத் திட்டம் இருந்தது. விமானம் 17 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென மின்னல் தாக்கியது. இதனால் விமானத்தின் முன்பகுதி சேதமடைந்ததுடன், தொழில்நுட்பக் கோளாறும் ஏற்பட்டது.
இதையடுத்து, திட்டமிட்ட நேரத்துக்கு முன்னதாகவே, மாலை 4.05 மணியளவில் விமானம் லக்னோவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. மின்னல் தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அந்த விமானம் லக்னோ விமான நிலையத்தில் தொடர்ந்து இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டது. விமானத்தை ஆய்வு செய்து, ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, விமான நிறுவனம் அதில் பயணம் செய்த 104 பயணிகளுக்காக மாற்று விமானத்தை ஏற்பாடு செய்தது. பயணிகள் அனைவரும் அந்த மாற்று விமானத்தில் ஏற்றப்பட்டனர்.
தொடர்ந்து, மாலை 6.22 மணியளவில் அவர்கள் ஆமதாபாத் நோக்கிப் புறப்பட்டனர். மின்னல் தாக்கிய விமானத்தில் ஏற்பட்ட சேதம் மற்றும் தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.