
இந்தூர், அக். 11- இந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் லக்னோவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இதையடுத்து ராஞ்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற 2-வது போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணி பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் 3-வது டி20 போட்டியில் இரு அணிகளும் இன்று இந்தூரில் மோதுகின்றன. ராஞ்சியில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 250 ரன்கள் இலக்கை துரத்திய மேற்கு இந்தியத் தீவுகள் அணி 9 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது.
கேப்டன் ஷாய் ஹோப் 45 பந்துகளில், 9 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகளுடன் 102 ரன்களும், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு 37 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 84 ரன்களும், ரொமாரியோ ஷெப்பர்டு 13 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 34 ரன்களும் விளாசி மிரட்டியிருந்தனர்.
இதனால் இன்றைய ஆட்டத்திலும் அதிரடிக்கு குறைவு இருக்காது என்றே கருதப்படுகிறது. ஏனெனில் போட்டி நடைபெறும் ஹோல்கர் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது, மேலும் இங்குள்ள எல்லைக்கோடுகள் குறுகிய தொலைவு கொண்டவை.
இதனால், இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு, ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் வீரர்கள் தங்களது செயல்பாட்டை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பதே வெற்றியைத் தீர்மானிக்கும்.
2-வது போட்டியில், ஷெர்ஃபேன் ரூதர்போர்டு 38 ரன்களில் இருந்த போது கொடுத்த எளிதான கேட்ச்சை மயங்க் யாதவ் தவறவிட்டிருந்தார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட ரூதர்போர்ட், கேப்டன் ஷாய் ஹோப்புடன் இணைந்து கூட்டாக 54 பந்துகளில் 120 ரன்கள் விளாசி ஆட்டத்தை இந்திய அணியிடம் இருந்து பறித்திருந்தார்.













