
லக்னோ, மே 7- ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. ரஜத் பட்டிதார் தலைமையிலான நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி 9 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 3 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. அந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசை கடும் சரிவை சந்தித்து இருந்தது. ஒரு கட்டத்தில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 79 ரன்கள் என்ற நிலையில் இருந்து 96 ரன்களை எட்டுவதற்குள் மேற்கொண்டு 4 விக்கெட்களை தாரை வார்த்து இருந்தது. முடிவில் 155 ரன்களுக்கு ஆட்டமிழந்திருந்தது ஆர்சிபி அணி. திடீர் சரிவுகள் ஏற்பட்டபோதிலும், இந்த சீசனில் ஆர்சிபி-யின் பேட்டிங் பெரும்பாலும் அதிரடியான ஆட்டத்தையே மையமாகவே கொண்டுள்ளது.விராட் கோலி 379 ரன்களுடன் மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். அதே நேரத்தில் தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார் ஆகியோரும் முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர். தொடக்க வீரரான பில் சால்ட் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளதால் விராட் கோலியுடன் இணைந்து அதிரடி தொடக்கம் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஜேக்கப் பெத்தேல் வசம் உள்ளது. ஜேக்கப் பெத்தேல் டி 20 உலகக் கோப்பையின் போது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். தற்போது ஐபிஎல் தொடரிலும் அவர், உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 9 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 7 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. கடைசியாக மும்பை இநதியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது. அந்த ஆட்டத்தில் லக்னோ அணி 228 ரன்கள் குவித்த போதிலும் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது. நிலையற்ற ஆட்டத்திறன், யுத்திகளில் உறுதியின்மை, நெருக்கடியான நேரங்களில் போட்டியை வெற்றிகரமாக முடிக்கத் தவறுவது போன்ற காரணங்களால் லக்னோ அணி இந்த சீசனில் சிதைந்து போயுள்ளது. மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த், எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் போன்ற பிரதான பேட்டர்கள் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர்.





















