Home மாவட்டங்கள் பெங்களூர் சாலையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

சாலையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

பெங்களூரு: ஜூலை 28-
பெங்களூருவில் தெரு ஓரமாக நின்று கால் டாக்ஸிக்காக காத்திருந்த பெண்ணிடம் அசிங்கமாக நடந்து கொண்டு பாலியல் தொல்லை கொடுத்த நபரை ராமமூர்த்தி நகர் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.
கடந்த 26-ஆம் தேதி இரவு, கல்கெரே பகுதியில் உள்ள மஞ்சுநாத நகர் அருகே பெண் ஒருவர் கால் டாக்ஸிக்காக காத்திருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த நபர் ஒருவர், அந்த பெண்ணிடம் மிகவும் ஆபாசமாக பேசி அசிங்கமாக நடந்து கொண்டார்.
“நான் காவல்துறையிடம் புகார் அளிப்பேன்” என அப்பெண் எச்சரித்த போதும், அந்த நபர் அவரை தொடர்ந்து திட்டிக்கொண்டே இருந்தார். இதையெல்லாம் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்வதை கவனித்த அந்த நபர், உடனடியாக தனது இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இதையடுத்து, அந்த பெண்ணும் தனக்கு நடந்த கொடுமை தொடர்பான வீடியோ மற்றும் அந்த நபரின் வாகன எண்ணை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். மேலும், “பொது இடங்களில் நடக்கும் இதுபோன்ற அத்துமீறல்களை சாதாரணமாக கடந்து செல்லக்கூடாது. நமது மௌனம் குற்றவாளிகளுக்கு மேலும் தைரியத்தை தரும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் பெங்களூரு நகர காவல்துறையினரை அதில் ‘டேக்’ செய்து, அந்த நபர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.
சமூக வலைதளப் பதிவை கவனித்த ராமமூர்த்தி நகர் காவல் நிலைய போலீசார், உடனடியாக அப்பெண்ணிடம் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபரை போலீசார் வலைவீசிப் பிடித்து கைது செய்தனர் என கிழக்கு மண்டல துணை ஆணையர் விக்ரம் அமதே தெரிவித்துள்ளார்.