
பெங்களூரு: ஆக. 1-
தலைநகரில் ரவுடிகள், சமுதாய விரோதிகள் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக பெங்களூரு நகர காவல்துறை தொடங்கியுள்ள ‘பிக்கப் ஸ்குவாட்’ சிறப்பு வேட்டை மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த 110 நாட்களில் நகரம் முழுவதும் நடத்தப்பட்ட இந்த அதிரடி வேட்டையில், 3,500-க்கும் மேற்பட்டோர் மீது கர்நாடக காவல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சோதனையின் போது 144 ரவுடிகள் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியபோது கையும் களவுமாகப் பிடிபட்டனர். 28 பேர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த 7 பேர் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கியிருந்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 14 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இரவில் ரவுடிகளும் சமூக விரோதிகளும் கூடும் 35 முதல் 40 பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்தபடி வரும் ‘பிக்கப் ஸ்குவாட்’ காவலர்கள், திடீர் சோதனை நடத்தி, சந்தேகத்திற்கு இடமானவர்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்கின்றனர் என்று நகர காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கையால் ரவுடிகள் பீதியில் உறைந்துபோயுள்ளனர். 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரையிலான காலத்தில் கொலை, கொலை முயற்சி போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபட்ட 78 முக்கிய ரவுடிகள் மீது ‘கோகா’ ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டம்) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் ‘ஹவாலி சீனா’ என்ற ஸ்ரீனிவாஸ் கவுடா என்ற பயங்கர ரவுடி குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பல்லாரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். நகர சிறையில் இருந்தால் அங்கிருந்தே குற்றச் செயல்களை இயக்க வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குற்றப்பிரிவு துணை ஆணையர் ஸ்ரீஹரி பாபு தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் மொத்தம் 6,800-க்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ள நிலையில், அதில் சுமார் 2,300 பேர் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாகக் கிழக்கு மண்டலத்தில் 518 பேரும், தென்மேற்கில் 355 பேரும், தெற்கில் 244 பேரும் உள்ளனர். இவர்களில் 160 ரவுடிகள் ஒரு வருட காலத்திற்கு நகரப் பகுதியிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். மேலும் 2026-ன் முதல் 6 மாதங்களில் மட்டும் 172 புதிய ரவுடி ஷீட்டுகள் திறக்கப்பட்டுள்ளன.
கடைகளின் முன் நின்று சிகரெட் பிடிப்பது, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது அல்லது தகராறில் ஈடுபடும் நபர்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக 112 என்ற உதவி எண்ணிற்கு அழைத்து புகார் அளிக்கலாம் என்றும், தகவல் கிடைத்தவுடன் ‘ஹொய்சளா’ ரோந்து வாகனங்களும், ‘பிக்கப் ஸ்குவாட்’ படையினரும் சம்பவ இடத்திற்கு விரைவார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













