Home மாவட்டங்கள் பெங்களூர் சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

சென்னை மாநகராட்சியிடம் ஒப்படைப்பு

சென்னை, ஆகஸ்ட் 29: செங்கல்பட்டு தாலுகா, திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தின் நெம்மேலி கிராமத்தில் 2009ம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வரும் ‘ஜெயந்தி டெய்சி’ விலங்குகள் காப்பகம், தற்போது சென்னை மாநகராட்சிக்கு வழங்கப்படும் நிலையை அடைந்துள்ளது. இந்த காப்பகம், கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ராஜிவ் காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்படும் தெருநாய்கள் மற்றும் பூனைகளை பராமரித்து வந்தது.வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று வந்த நிலையில், 2024-25 நிதியாண்டில் அந்த நிதியுதவி நிறுத்தப்பட்டது. இதனால், ஜூன் 4ம் தேதி சென்னை மாநகராட்சிக்கு கடிதம் எழுதிய ஜெயந்தி, காப்பகத்தின் நிலம் மற்றும் கட்டிடங்களை எந்தவித நிதி பரிவர்த்தனையும் இல்லாமல் மாநகராட்சிக்கு வழங்க விருப்பம் தெரிவித்துள்ளார்.
தற்போது காப்பகத்தில் சுமார் 250 நாய்கள் மற்றும் 80 பூனைகள் பராமரிக்கப்படுகின்றன. அவற்றுடன்
காப்பகத்தை மாநகராட்சி ஏற்று நடத்தவும் கோரப்பட்டுள்ளது. இதற்கிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொதுநிறுவன வளாகங்களில் இருந்து அகற்றப்படும் தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு அங்கீகரிக்கப்பட்ட காப்பகங்களில் பராமரிக்க வேண்டும் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
மணலி மற்றும் பெருங்குடி மண்டலங்களில் தலா 250 நாய்களை பராமரிக்கும் இரண்டு காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், ‘ஜெயந்தி டெய்சி’ காப்பகத்தையும் மாநகராட்சி நிர்வாகத்தில் கொண்டு வருவது கூடுதல் வசதியை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகு, நிலம் மற்றும் கட்டடங்களை நன்கொடையாகப் பெற்று மாநகராட்சி காப்பகத்தை நிர்வகிக்கவும், ‘ஜெயந்தி டெய்சி விலங்குகள் காப்பகம்’ என்ற தற்போதைய பெயரையே தொடரவும் மாமன்ற அனுமதி கோரப்பட்டுள்ளது.