
வாஷிங்டன், செப். 2- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கனடாவின் எல்லைப் பகுதியில் உள்ள ஒன்டாரியோ ஏரியின் பெயரை ‘லேக் அமெரிக்கா’ (Lake America) என மாற்றுவதற்கு நிர்வாக உத்தரவு பிறப்பித்தது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வர்த்தகப் போர் மற்றும் கனடியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 50 சதவீத சுங்க வரிகளுக்கு மத்தியில், இந்தத் திடீர் பெயர் மாற்றம் அரசியல் ரீதியாக அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.அதிபர் டிரம்ப் தனது நிர்வாக உத்தரவை ஓவல் அலுவலகத்தில் கையெழுத்திட்டு, இந்த பெயர் மாற்றம் உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையில், கனடா பிரதமர் மார்க் கார்னி மிக உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட கருத்தில், ஏரியின் பெயரை மாற்றும் டிரம்பின் இந்த நடவடிக்கையை முற்றிலுமாக நிராகரித்தார். ‘ஒன்டாரியோ’ என்ற பெயர், ‘வெண்டாட்’ (Wendat) என்ற பழங்குடியின மொழியிலிருந்து
உருவானது என்று பிரதமர் கார்னி சுட்டிக்காட்டினார். அந்த மொழியில், ‘ஒன்டாரியோ’ என்பதற்கு ‘மிகப் பெரிய மற்றும் அழகான ஏரி’ என்று பொருள். இந்த வரலாற்றுத் தரவை முன்வைத்த அவர், “யதார்த்தமான பெயரிடுதல் என்பது ஒன்டாரியோ என்று அழைப்பதே ஆகும் – அது அன்று, இன்று, எப்போதும் அப்படியே இருக்கும்” என்று திட்டவட்டமாகக் கூறினார். இந்த ஏரியின் பெயர் கனடாவின் கூட்டமைப்பு
மற்றும் அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம் ஆகியவற்றிற்கு 400 ஆண்டுகளுக்கும் மேலான காலத்திற்கு முந்தையது என்பதையும் அவர் அழுத்தமாகப் பதிவு செய்தார். அதிபர் டிரம்ப், இந்த விவகாரத்தை ஒரு சமூக ஊடக நாடகமாக மாற்றியுள்ளார். டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களில், ஒன்டாரியோ ஏரியைக் காட்டி, அதை ‘லேக் அமெரிக்கா’ என்று அழைக்கப்போவதாக டிரம்ப் வீடியோக்களைப் பகிர்ந்தார்.















