
தூத்துக்குடி: செப்டம்பர் 9-
திருவிழாவின் 10-ம் நாளை முன்னிட்டு இன்று தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை போன்ற பூஜைகள் நடைபெற்றன.காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேர் ரத வீதிகளைச் சுற்றியது. பின்னர், சுவாமி குமரவிடங்கபெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய பெரிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்ற பக்திகோஷம் முழங்கத் தொடங்கிய இந்நிகழ்வில், பக்தர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
தேரோட்டம் முடிந்து, வள்ளியம்மன் வீற்றிருந்த தேரை பக்தர்கள் இழுத்தனர். இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். மேலும், போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா. அருள்முருகன், இணை ஆணையர் ஆ. அருணாச்சலம் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
















