
டாக்கா, செப். 16- வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தின்போது வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டில்,
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 7 தலைவர்களுக்கு மரண தண்டனை விதித்து வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. 2024ம் ஆண்டு டாக்காவில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
அப்போது வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி டாக்காவில் இருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
அதுமுதல் அவர் தொடர்ந்து இந்தியாவில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த 7 மூத்த தலைவர்களுக்கு வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம்-2 இன்று (செவ்வாய்கிழமை) மரண தண்டனை விதித்துள்ளது. நீதிபதி முகமது நஸ்ருல் இஸ்லாம் சவுத்ரி தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ஏழு பேருக்குமான தீர்ப்பை வழங்கியது. அவாமி லீக் பொதுச் செயலாளரும், முன்னாள் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சருமான ஒபைதுல் குவாடர், அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் ஏ.எப்.எம். பஹாவுதீன் நசிம், முன்னாள் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முகமது அலி அரபாத் ஆகியோர் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் அடங்குவர்.













