
டொரண்டோ, செப். 16- கனடாவில் பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அறுவடைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், அறுவடைக்கு தயாராகியுள்ள பயிர்களை உரிய நேரத்தில் அறுவடை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.கோதுமை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் கனடா முன்னணி நாடாக உள்ளது. அந்த நாட்டில் கனோலா எனப்படும் கடுகு எண்ணெய்க்கான பயிர்களும், முதல்தர கோதுமை உள்ளிட்ட பல்வேறு பயிர்களும் தற்போது அறுவடைக்குத் தயாராகியுள்ளன. இந்த நிலையில், பருவம் தவறி பெய்து வரும் கனமழை காரணமாக அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல வயல்களில் தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதால், அங்கு பயிர்கள் அழுகும் அபாயம் அதிகரித்துள்ளது.கடந்த ஆகஸ்டு மாதத்திலிருந்தே கனோலா உள்ளிட்ட இந்த வகை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அவற்றை அறுவடை செய்ய முடியாத சூழல் நீடித்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கனோலா மற்றும் கோதுமைப் பயிர்கள் வீணாகக்கூடும் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு பயிர்கள் அழுகினால், விவசாயிகளுக்கு கணிசமான நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளது.













