
திருமலை: செப். 16-
உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலின் இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவ விழாக்கள் நடைபெற உள்ளன. அவற்றில் முதலாவதாக நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவே நேற்று மாலை தொடங்கியது.
பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, நேற்று மூலவருக்கு 11 கஜம் கத்வால் இரட்டை வேட்டி சாத்தப்பட்டது. சுவாமிக்கு வைர அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலை, உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் தங்கப் பல்லக்கில் கொடிக்கம்பம் வரை அழைத்து வரப்பட்டனர்.
அங்கு, உற்சவர்களின் முன்னிலையில் வேதங்கள் முழங்கவும், மங்கள இசை ஒலிக்கவும், கருடன் சின்னம் பொறித்த கொடி ஆகம சாஸ்திரங்களின்படி தங்கக் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. கொடியேற்ற நிகழ்வில் கோயில் சம்பிரதாயங்கள் முறையாகப் பின்பற்றப்பட்டன. இதையடுத்து, நேற்றிரவு பெரிய சேஷ வாகனத்தில் உற்சவரான மலையப்பர் நான்கு மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
பிரம்மோற்சவத்தின் முதல் நாளான நேற்றிரவு, ஆந்திர அரசு சார்பில் அந்த மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமது மனைவியுடன் பட்டு வஸ்திரத்தை சுவாமிக்கு காணிக்கையாக வழங்கினார். அதற்கு முன்பாக, அவர் திருமலையில் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார்.













