
சென்னை: செப்.19-
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருகிறது. அண்ணா பல்கலைக்கழக மாணவர் ஹரிஷ் குமார் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக நேற்று வெளியான தகவலால் அதிர்ச்சி ஏற்பட்டது. பொதுமக்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
பருவநிலை மாற்றத்தால் டெங்கு பரப்பும் ‘ஏடிஸ்-எஜிப்டை’ கொசுக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. இதனால் பாதிப்பு உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை 16,500-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டு, போதிய மருந்துகளை இருப்பில் வைக்குமாறு மருத்துவமனைகளுக்கும் மாவட்ட நிர்வாகங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கி படித்த ஹரிஷ் குமார், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்தார். அவர் டெங்குவால் இறந்ததாகக் கூறப்பட்டதை மருத்துவமனை நிர்வாகம் மறுத்தது. நண்பர்கள் அவரை சுயநினைவற்ற நிலையில் அழைத்து வந்ததாகவும், பரிசோதனைகளில் டெங்கு உறுதி செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தது. தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர் முறையான சிகிச்சையும் தண்ணீரும் பெறாததால் நுரையீரல் செயலிழந்து, அடுத்தடுத்து உடல் உறுப்புகள் செயலிழந்ததாகவும், உடனடியாக அனுமதித்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம் என்றும் கூறியது. மற்றொரு மாணவர் ஆனந்த் ராஜ், காய்ச்சலால் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு டெங்கு இருப்பதாகவும், மேலும் பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.













