
சென்னை:
செப். 19- தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு, தி.மு.க. நாடாளுமன்ற குழு துணைத் தலைவர் தயாநிதிமாறன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ரம்ஜான், காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறைகள், விநாயகர் சதுர்த்தி, குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட பண்டிகை மற்றும் விடுமுறை காலங்களில், தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும் நேரங்களிலும் பல லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். இதையொட்டி, தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகளும், மத்திய அரசு சார்பில் கூடுதல் ரயில்களும் இயக்கப்படுகின்றன. எனினும், அவை போதுமானதாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கும், கோவை, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கும் விடுமுறை காலங்களில் போதிய ரயில்கள் இயக்கப்படுவதில்லை. இதனால், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளில் மக்கள் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் ரயில் பயணத்தையே விரும்பும் நிலையில், சிறப்பு ரயில்கள் போதிய அளவில் இயக்கப்படாததால் அவர்கள் சிரமப்படுகின்றனர்.
தனது கடிதத்தில் தயாநிதிமாறன், “வார இறுதி மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களிலேயே முடிந்து விடுகிறது. விடுமுறை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தைவிட பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன” என்று கூறியுள்ளார்.
குறைவான ரயில் சேவைகள் மற்றும் போதிய பெட்டி வசதியின்மையால், முன்பதிவில்லாத பொதுப்பெட்டிகளில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் பல மணி நேரம் நின்றபடி பயணிக்க வேண்டியுள்ளது. கூட்ட நெரிசலால் முன்பதிவு செய்யாதவர்கள், முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் நுழைவதால் பயணிகளிடையே வாக்குவாதங்களும் ஏற்படுகின்றன.













