
சென்னை, செப். 19-சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சுமார் 4.5 கிமீ உயரத்தில் வடக்கு உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சியும், 5.8 கிமீ உயரத்தில் மராத்வாடாவிலிருந்து தென்கிழக்கு அரபிக்கடல் வரை உள் கர்நாடகா, கேரளா வழியாக காற்றழுத்தத் தாழ்வுப் பாதையும் நிலவுகின்றன.
இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேக பலத்த காற்று, இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் சில இடங்களிலும், காரைக்காலிலும் மிதமான மழை பெய்யலாம். சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
20, 21-09-2026 தேதிகளில் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், மதுரை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்கள், புதுவையில் கனமழையும், பிற மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், சேலம், ஈரோடு, நாமக்கல், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்காலில் மிதமான மழையும் பெய்யலாம்.













