
சென்னை, செப். 19- சென்னையைச் சேர்ந்தவர் கோயல் (80). இவர் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிலை நடத்தி வந்தார்.
தனது மகன் சூரஜ் மீது புகார் தெரிவித்து, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கோயல் வழக்குத் தொடர்ந்தார். மனுவில், “எனக்குச் சொந்தமான வீட்டை எழுதி வாங்கிக்கொண்ட மகன் சூரஜ், வயதான காலத்தில் என்னை ஆதரவின்றி விட்டுவிட்டார். எனவே, எனக்கு மாதாந்திர பராமரிப்புச் செலவுத் தொகை வழங்க மகனுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த குடும்ப நல நீதிமன்றம், கோயலுக்கு மாதந்தோறும் ரூ.75 ஆயிரத்தை பராமரிப்புச் செலவாக வழங்குமாறு சூரஜுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து சூரஜ் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர் மோகன் கூறியதாவது: “தனது பிற சொத்துகள் மூலம் கிடைக்கும் வாடகை வருவாயை மறைத்து கோயல் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். எனவே, பராமரிப்புச் செலவுத் தொகை பெற அவருக்கு உரிமை இல்லை. கோயலுக்கு மாதந்தோறும் ரூ.75 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கீழமை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்கிறேன். அதேநேரம், வயதான காலத்தில் மூத்த குடும்ப உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் அன்பு, ஆதரவு, அரவணைப்பை பணத்தால் ஈடுசெய்ய முடியாது. தந்தை–மகன் இடையே உள்ள பிரச்சினைகள் சமரசமாகப் பேசி தீர்க்கப்பட்டு, சுமுகமான உறவு ஏற்படும் என்று நம்புகிறேன்” என்றார்.














