
சென்னை: செப். 22:
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் விஜய் சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
திருவான்மியூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதல்வர் விஜய், மாணவர்களுக்கு உணவு பரிமாறியதுடன், அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். பின்னர் பள்ளி வளாகத்தைப் பார்வையிட்டு, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், ஜெகதீஸ்வரி, தலைமைச் செயலர் சாய்குமார் மற்றும் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இடைத்தேர்தல் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகள் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டம் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது. முதல்வர் பங்கேற்றதையொட்டி பள்ளி மற்றும் சுற்றுப்புறங்களில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர். அவரைக் காண பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் பொதுமக்களும் பள்ளிக்கு வெளியே திரண்டிருந்தனர்.
தமிழக அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் நோக்கில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் கடந்த 2022 செப். 15-ம் தேதி தொடங்கப்பட்டது. பின்னர் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தினமும் கிச்சடி, பொங்கல் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது 37,447 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 19.34 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு இத்திட்டத்துக்கு காமராஜர் பெயர் சூட்டப்பட்டு, 6 முதல் 8-ம் வகுப்புகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 15,910 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இதற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.217 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.













