Home மாவட்டங்கள் சென்னை உண்மை சொன்னால் ராதா சிறை செல்வார்: அம்பிகா

உண்மை சொன்னால் ராதா சிறை செல்வார்: அம்பிகா

சென்னை, செப். 23:
சொத்து பிரச்னையைத் தீர்க்க ராதா அளித்த செக்கை அவரே நிறுத்தியதாகவும், தான் உண்மையைச் சொன்னால் ராதா சிறைக்குச் செல்ல நேரிடும் என்றும் நடிகை அம்பிகா தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகைகளாகத் திகழ்ந்த சகோதரிகள் அம்பிகா, ராதா. சென்னையில் இவர்களுக்கு ஏஆர்எஸ் கார்டன் என்ற பெயரில் இடம் மற்றும் சொத்துகள் உள்ளன. இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனரிடம் ராதா அளித்த புகாரில், தனது வீட்டில் இருந்த செக்கை அம்பிகாவும், தம்பி மல்லிகார்ஜூன் குஞ்சன் நாயரும் திருடி, ரூ.46 கோடி மோசடி செய்ய முயன்றதாகக் கூறியிருந்தார். இதுகுறித்து பேச அம்பிகா தன்னுடைய அழைப்பை ஏற்கவில்லை என்றும், வீட்டுக்குள் தன்னை அனுமதிப்பதில்லை என்றும் ராதா செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த அம்பிகா, ஏஆர்எஸ் சொத்தில் 50 சென்ட் நிலப் பங்கில் மோசடி நடந்துள்ளதாகவும், ஏஆர்எஸ் கார்டன் ஸ்டூடியோவில் தனக்கு மூன்றில் ஒரு பங்கு உரிமை இருப்பதாகவும் கூறினார். நிலம், தங்க நகை மோசடி மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளை மறைத்து ராதா நாடகமாடுவதாகவும், அவரது புகார் உண்மைக்கு புறம்பானது என்றும் அவர் தெரிவித்தார். ஏஆர்எஸ் கார்டன் உருவாக முக்கிய காரணம் தான்தான் என்றும், அது எம்.ஜி.ஆர். வழங்கியது என்பது தவறான தகவல் என்றும் அம்பிகா கூறினார். ஏஆர்எஸ் கார்டன் சொத்தில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டதாகவும், தன் பெயரில் இருந்த தங்கத்தையும் ராதா வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். சொத்து பிரச்னையைத் தீர்க்க ராதாதான் செக் கொடுத்ததாகவும், பின்னர் அதை நிறுத்தியதும் அவரே என்றும் கூறினார். “செக் பவுன்ஸ் ஆனது; பணம் போனது எனக்கு. ராதாதான் எங்களுக்கு ரூ.97 கோடி தர வேண்டும். ஆனால் என் மீது மோசடி புகார் அளித்தது வேதனை அளிக்கிறது. நான் உண்மையைச் சொன்னால் ராதாதான் சிறைக்குச் செல்ல நேரிடும்” என்று அம்பிகா தெரிவித்தார். குடும்ப விவகாரம் வெளியே தெரிய வேண்டாம் என நினைத்ததாகவும், சமரசம் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறிய அவர், திருடியதாகக் கூறியதைத்தான் ஏற்க முடியவில்லை எனக் கண்ணீர் மல்க தெரிவித்தார்.