
புதுடெல்லி, செப். 24-
லண்டனைச் சேர்ந்த ஹுருன் நிறுவனத்தின் இந்தியக் கிளை வெளியிட்ட 2026-ம் ஆண்டுக்கான இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில், அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானியும் அவரது குடும்பத்தினரும் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். அவர்களின் சொத்து மதிப்பு ரூ.9.22 லட்சம் கோடிக்கும் அதிகமாக இருப்பதாக பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியும் அவரது குடும்பத்தினரும் ரூ.8.63 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 2-வது இடத்தில் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக, லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட ஆர்சிலர் மிட்டல் நிறுவனத்தின் தலைவர் லட்சுமி நிவாஸ் மிட்டலும் அவரது குடும்பத்தினரும் ரூ.3.39 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளனர். சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் சைரஸ் எஸ். பூனாவாலா 4-வது இடத்திலும், ஹெச்சிஎல் நிறுவனத்தின் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா 5-வது இடத்திலும் உள்ளனர். ஆதித்யா பிர்லா குழுமத்தைச் சேர்ந்த குமார் மங்கலம் பிர்லா 6-வது இடத்திலும், சன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் திலீப் ஷாங்வி 7-வது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர். விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி 8-வது இடத்திலும், வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் அனில் அகர்வால் 9-வது இடத்திலும், டோரன்ட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த சமீர் மேத்தா 10-வது இடத்திலும் உள்ளனர். கடந்த 2025-ம் ஆண்டு ஹுருன் இந்தியா வெளியிட்ட பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், கவுதம் அதானி 2-வது இடத்திலும் இருந்தனர். இந்த நிலையில், 2026-ம் ஆண்டுக்கான பட்டியலில் கவுதம் அதானி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.











