
ஹைதராபாத், செப். 26-
ஹைதராபாத்தில் நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. இதில் பாலாப்பூர் விநாயகர் சிலையின் கையில் வைக்கப்பட்டிருந்த மகா லட்டு பிரசாதம் ரூ.39 லட்சத்துக்கு ஏலம் போனது. கடந்த 14-ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து 12-வது நாளான நேற்று, ஹைதராபாத்தில் வைக்கப்பட்டிருந்த அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பல்வேறு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. ஹைதராபாத்தில் 69 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த மகா கணபதி சிலையின் ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்த சிலை நேற்று மதியம் 2.15 மணிக்கு நெக்லஸ் ரோடு பகுதியில் உள்ள உசேன் சாகரில் கரைக்கப்பட்டது. இதையடுத்து பாலாப்பூர் விநாயகர் சிலை உள்ளிட்ட ஆயிரக்கணக்கான சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, 36 நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, கிரேன்களின் உதவியுடன் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
பாதுகாப்புப் பணியில் சுமார் 10 ஆயிரம் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். ஹைதராபாத் பாலாப்பூர் விநாயகரை பக்தர்கள் ஒவ்வோர் ஆண்டும் சிறப்பாக வழிபட்டு வருகின்றனர். கடந்த 45 ஆண்டுகளாக பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரிய பந்தல் அமைத்து சிலை நிறுவப்படுகிறது. அப்போது விநாயகரின் கையில் லட்டு பிரசாதம் வைக்கப்படுகிறது.
சிலை ஊர்வலத்துக்கு முன்னதாக 9 அல்லது 11-வது நாளில் அந்த லட்டு ஏலம் விடப்படுகிறது. முதன்முதலில் இந்த லட்டு ரூ.450-க்கு ஏலம் போனது. பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பாக தயாரிக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான லட்டு, நேற்று ரூ.39 லட்சத்துக்கு ஏலம் போனது. சாஹிப் நகரைச் சேர்ந்த பிரணீத் ரெட்டி அதனை ஏலத்தில் எடுத்தார். கடந்த ஆண்டு இந்த லட்டு ரூ.35 லட்சத்துக்கு ஏலம் போனது.
















