Home செய்திகள் தேசிய செய்திகள் உத்தரப் பிரதேசத்தில் தொடர் மழைக்கு 56 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் தொடர் மழைக்கு 56 பேர் பலி

லக்னோ: செப். 28-
உத்தரப் பிரதேசத்தில் 60 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் பெய்த கனமழையால் 56 பேர் உயிரிழந்துள்ளனர். காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மாநிலம் முழுவதும் சனிக்கிழமை கனமழை பெய்யத் தொடங்கியது. சீதாபூர், லக்கிம்பூர் கெரி, பலராம்பூர், கோரக்பூர், அயோத்தி உள்ளிட்ட 32-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருந்தது. மாநிலம் முழுவதும் நேற்று வரை 60 மணி நேரத்துக்கும் மேலாக இடைவிடாமல் மழை கொட்டித் தீர்த்தது.
மழை பாதிப்புகளால் உயிரிழந்த 56 பேரில், அதிகபட்சமாக சீதாபூரில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். லக்கிம்பூர் கெரி, பலராம்பூர், அயோத்தி, கோரக்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் இடிந்தது, மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களில் மாநிலம் முழுவதும் 46 பேர் காயமடைந்துள்ளனர். 1,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. கனமழையால் 107 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. கங்கை, யமுனை, காக்ரா, ராப்தி, கண்டக், சோன், ஜிக்கோ உள்ளிட்ட நதிகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்ந்து வருகிறது. இதையடுத்து, 32 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தலைநகர் லக்னோ உட்பட பல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளும் வெள்ளத்தால் கடுமையாக சேதமடைந்துள்ளன. இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறுகையில், “எல் நினோ பாதிப்பு காரணமாக உத்தரப் பிரதேசத்தில் வழக்கத்துக்கு மாறாக கனமழை பெய்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 90 முதல் 73 சதவீதம் வரை மழை அதிகரித்துள்ளது” என்றனர். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மாநிலம் முழுவதும் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் இரவு பகலாக மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.