
பெங்களூர்: செப். 28-
பெங்களூரு கெங்கேரி அருகே உள்ள ராஜராஜேஸ்வரி மருத்துவக் கல்லூரி பின்புறம் காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அஞ்சேபாளையா கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (45) என்பவரே பலியான துரதிர்ஷ்டவாசி ஆவார். இந்தச் சம்பவம் இன்று விடியற்காலை 5 மணி அளவில் நடந்துள்ளது.
நாகராஜ் வழக்கம்போல் நடைபயிற்சி (வாக்கிங்) சென்றபோது, அவரை யானை தாக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தில் இரண்டு சுற்றுச்சுவர்கள் (காம்பவுண்ட்) இடிந்து விழுந்துள்ளன. எனவே, யானை தாக்கியதால்தான் அவர் உயிரிழந்திருக்கக்கூடும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினரும் காவல்துறையினரும் விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முழுமையான விசாரணைக்கு பிறகே உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் தெரியவரும்.













