Home மாவட்டங்கள் பெங்களூர் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

மதுரை: செப். 28-
தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் எடையிலான ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ வழங்கும் திட்டத்தை மதுரையில் தொடங்கி வைப்பதற்காக, முதல் அமைச்சர் விஜய் மதுரை வந்தடைந்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியாக த.வெ.க. அறிவித்திருந்தது. அதன்படி, 22.6.2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல் அமைச்சர் விஜய் இன்று நேரடியாகத் தொடங்கி வைக்க உள்ளார்.
திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் 107 மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த மருத்துவமனைகளில் தங்க மோதிரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மருத்துவமனையிலும் தினமும் 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.
முதல் கட்டமாக, திட்டத்திற்காக 1 லட்சத்து 28 ஆயிரம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படுகின்றன. இதில் மதுரை மாவட்டத்தில் மட்டும் 6,400 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் த.வெ.க. நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை வரையிலான சாலையின் இருபுறங்களிலும் மக்கள் திரண்டு நின்றனர். அவர்களைப் பார்த்து விஜய் உற்சாகமாகக் கை அசைத்தபடி சென்றார். விஜய் வருகையை முன்னிட்டு வழிநெடுகிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி, ரிங்ரோடு சுற்றுச்சாலை, கருப்பாயூரணி வழியாக ரோடு ஷோவாக அவர் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு வந்தார்.