Home செய்திகள் தேசிய செய்திகள் குழந்தை உணவுப் பொட்டலங்களில் தாய், குழந்தை படம் கூடாது

குழந்தை உணவுப் பொட்டலங்களில் தாய், குழந்தை படம் கூடாது

மும்பை, செப். 30-
குழந்தைகளுக்கான உணவுப் பொட்டலங்களில் தாய், குழந்தையின் புகைப்படங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று மஹாராஷ்டிரா உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் துக்காராம் முண்டே உத்தரவிட்டுள்ளார். மஹாராஷ்டிராவில் உணவின் தரம் மற்றும் சுகாதாரம் தொடர்பாக உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் தொடர்பான விதிகளையும் துக்காராம் முண்டே கடுமையாக்கியுள்ளார். அதன்படி, பச்சிளம்குழந்தைகளுக்கான அனைத்து உணவுப் பொட்டலங்களிலும், “குழந்தைக்குத் தாய்ப்பாலே சிறந்தது” என்ற வாசகம் கட்டாயமாக இடம்பெற வேண்டும். ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே, மருத்துவ ஆலோசனையின் அடிப்படையில் இந்தப் பொருட்களைத் துணை உணவாக வழங்க வேண்டும் என்பதையும் பொட்டலங்களில் குறிப்பிட வேண்டும். தாய்ப்பாலை வணிக ரீதியாக விற்பனை செய்வதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. தாய்ப்பாலுக்கு மாற்றுப் பொருட்கள் அல்லது குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை விளம்பரம் செய்யக்கூடாது. சமூக ஊடக ‘இன்ஃப்ளூயன்சர்கள்’ மூலமாகவும் அவற்றை விளம்பரப்படுத்தக் கூடாது. குழந்தைகளுக்கான பால் மற்றும் உணவுப் பொருட்களுக்கு இலவச மாதிரிகள், பரிசுகள் அல்லது தள்ளுபடிகள் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவற்றின் பொட்டலங்களில் தாய், குழந்தையின் புகைப்படங்கள் இடம்பெறக் கூடாது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து துக்காராம் முண்டே கூறுகையில், தாய்ப்பாலூட்டலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் செய்திகள் இல்லாதது பெரிய மீறல் என்றார். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவித்து, அவர்களுக்கு சரியான ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.