
ஆமதாபாத், செப். 30-
அரபிக்கடலில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்த முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் போதைப்பொருட்கள் கடத்தலைக் கண்டறிந்து கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடத்தல் கும்பல்களை அடையாளம் காணும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படையினரும் இந்திய கடலோரக் காவல் படையினரும் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது லட்சத்தீவு அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் சென்று கொண்டிருந்த படகு ஒன்றை பாதுகாப்புப் படையினர் மறித்து சோதனையிட்டனர். சோதனையின்போது அந்தப் படகில் 526 கிலோ எடையிலான மெத்தம்படமைன், ஹெராயின் உள்ளிட்ட உயர்தர போதைப்பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு ரூ.3 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் பாகிஸ்தானியர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் அந்தப் படகு, அதில் இருந்த ஊழியர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பலத்த பாதுகாப்புடன் மும்பைக்கு கொண்டு வரப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது. அவர்களுக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக குஜராத் பயங்கரவாத ஒழிப்பு படை சார்பில் இன்று செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என்றும், அதில் கடத்தல் தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.













