
புதுடெல்லி, செப். 30-
சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ள நிலையில், அதனை மீனவர்கள் எடுத்துச் செல்ல தமிழக அரசு ஏன் அனுமதிக்கவில்லை என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை எதிர்த்து, மீனவர்கள் மற்றும் மீனவர் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தன. அந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், தமிழகக் கடற்கரையிலிருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரத்யேக பொருளாதார மண்டல கடற்பரப்பில் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன்பிடிக்க மீனவர்களுக்கு அனுமதி வழங்கி செப்டம்பர் 2-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.இந்த நிலையில், சுருக்குமடி வலையை எடுத்துச் செல்ல தமிழக அரசு அனுமதிப்பதில்லை என்று கூறி, விழுப்புரத்தைச் சேர்ந்த மீனவர்கள் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மீனவர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஜெய்சுகின் ஆஜராகி, உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் சுருக்குமடி வலையை எடுத்துச் செல்ல தமிழக அரசு அனுமதிப்பதில்லை என்றார். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரத்யேக பொருளாதார மண்டல கடற்பகுதிக்குச் சுருக்குமடி வலையுடன் செல்வதற்கான அனுமதியைப் பெறுவதற்காக அளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான விண்ணப்பங்கள் தமிழக அரசால் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக தமிழக அரசுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரினார்.
இதையடுத்து நீதிபதிகள், “மீன்பிடித் தடைக்காலம் இல்லாத நிலையிலும் சுருக்குமடி வலையை எடுத்துச் செல்ல ஏன் அனுமதிக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினர். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழக அரசு அதைச் செயல்படுத்தாமல் சுருக்குமடி வலையை முழுமையாகத் தடுப்பதை ஏற்க முடியாது என்றும், இந்த விவகாரத்தை நீதிமன்றம் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்தனர். தமிழக அரசின் செயல்பாடு சரியானது அல்ல எனக் குறிப்பிட்டு, 2 வாரங்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர்.













