
சண்டிகர், அக். 1- பஞ்சாபை 2029-ம் ஆண்டு டிசம்பருக்கு முன்பாக போதைப்பொருள் பிடியிலிருந்து விடுவிப்போம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்தார். பாஜக சார்பில் நடத்தப்பட்ட ‘போதையற்ற பஞ்சாப் யாத்திரை’ நிறைவு விழாவில் பேசிய அவர், பஞ்சாப்பில் ஆட்சி நடத்தும் ஆம் ஆத்மி அரசை ‘பேரிடர்’ என விமர்சித்தார். மேலும், ‘போதையற்ற பஞ்சாப்’ என்ற முழக்கத்துடன் பாஜக அடுத்த தேர்தலைச் சந்திக்கும் என்றும் அவர் தெரிவித்தார். செப்டம்பர் 18-ம் தேதி பஞ்சாபின் நான்கு திசைகளிலிருந்து தொடங்கிய இந்த யாத்திரை, 13 நாள்களில் சுமார் 4,000 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, கடந்த செவ்வாய்க்கிழமை ஜலந்தரைச் சென்றடைந்தது. இதன் நிறைவு விழா பேரணி நேற்று நடைபெற்றது. ஜலந்தர் மாவட்டம் பராகர்பூர் கிராமத்தில் 60 ஏக்கர் பரப்பளவில் நடைபெற்ற பேரணியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். போதைப்பொருள் பயன்பாட்டால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் இதில் கலந்து கொண்டனர். இதனிடையே, இந்திய கடலோரக் காவல்படையும் குஜராத் தீவிரவாதத் தடுப்புப் படையும் இணைந்து, லட்சத்தீவு அருகே மேற்கு அரபிக் கடலில் சென்றுகொண்டிருந்த சந்தேகத்துக்கிடமான படகை கடந்த 25-ம் தேதி மடக்கி சோதனை செய்தன. ஈரான் நாட்டைச் சேர்ந்த அந்தப் படகில் இருந்து சுமார் 526 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. படகை இயக்கியதாகக் கூறப்படும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.3,000 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













