
புதுடெல்லி, அக். 1-
இண்டியா கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்ற நிலையில், அக்கட்சித் தலைவர்களை விமர்சித்து நகரின் பல்வேறு பகுதிகளில் அனாமதேய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உத்தி வகுப்பதற்காக இண்டியா கூட்டணிக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடந்த இடத்துக்குச் செல்லும் வழியில், சாலையோரங்களிலும் ரவுண்டானா பகுதிகளிலும் சிறிய அளவிலான பல பேனர்கள் காணப்பட்டன.அந்தப் பேனர்களில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து அவதூறான கருத்துகள் இடம்பெற்றிருந்தன. இந்தியிலும் ஆங்கிலத்திலும் மிகச் சுருக்கமாக எழுதப்பட்டிருந்த வாசகங்கள் எதிர்க்கட்சிகளை விமர்சிக்கும் மற்றும் கிண்டலடிக்கும் வகையில் இருந்தன. ராகுல் காந்தியின் புகைப்படத்துடன் வைக்கப்பட்டிருந்த ஒரு போஸ்டரில், “பிஹார் தேர்தல் பிரசாரத்திலிருந்து 59 நாட்கள் விலகியிருந்து, அவர் வெளிநாட்டில் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கைகளில் பை மற்றும் பெட்டியுடன் ராகுல் காந்தி செல்வது போன்ற புகைப்படமும் அதில் இடம்பெற்றிருந்தது. ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, கேஜ்ரிவால், தேஜஸ்வி, அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே ஆகியோருடன் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் படமும் இடம்பெற்றிருந்த மற்றொரு பேனரில், “வெற்றி பெற்றால் தேர்தல் ஆணையத்துக்கு கைதட்டல்; தோல்வி அடைந்தால் அதை ஒழிக்க வேண்டும் எனக் குரல்” என்ற வகையில் விமர்சிக்கப்பட்டிருந்தது.













