
பெங்களூர்: அக். 1-
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி நேற்று தனது ‘பாரத் ஜோடோ-2’ யாத்திரையைத் தொடங்கியதைத் தொடர்ந்து, அதற்குப் போட்டியாக பாஜகவின் ‘பூத் விஜய் சங்கல்ப யாத்திரை’ இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
கோலார் மாவட்டம் முளபாகிலு தாலுகாவில் உள்ள புகழ்பெற்ற குறுடுமலை ஸ்ரீ விஸ்வேஸ்வரா கோவிலில் சிறப்புப் பூஜை செய்து, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா இந்த யாத்திரையைத் தொடங்கி வைத்தார்.
காங்கிரஸ் அரசை வீழ்த்த சபதம்!
யாத்திரையைத் தொடங்கி வைத்துப் பேசிய பி.ஒய். விஜயேந்திரா கூறியதாவது:
“நாடு முழுவதும் பாஜக நடத்தி வரும் சேவா சங்கல்ப பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் இந்த பூத் விஜய் சங்கல்ப யாத்திரை நடத்தப்படுகிறது. கர்நாடகாவில் ஆட்சி செய்யும் ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை வேரோடு பிடுங்கி எறியும் நோக்கில் இந்த யாத்திரை தொடங்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் எல்லை மீறிப்போய்விட்டது. லஞ்சம் கொடுக்காமல் எந்த அதிகாரியும் வேலை செய்வதில்லை என்று காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ அசோக் ராயே பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். அந்த அளவுக்கு ஊழல் மலிந்து கிடக்கிறது,” என்று கடுமையாகத் தாக்கினார்.
கே.ஜி.எஃப், பங்காரப்பேட்டையில் யாத்திரை!
குறுடுமலை விஸ்வேஸ்வரா கோவிலில் தொடங்கிய இந்த யாத்திரை, பங்காரப்பேட்டை மற்றும் கே.ஜி.எஃப் (KGF) சட்டமன்றத் தொகுதிகளின் வழியாக ஊர்வலமாகச் சென்றது.
இந்த நிகழ்வில் பாஜக மாநில முக்கிய நிர்வாகிகளான பிரீதம் கவுடா, நந்தீஷ் ரெட்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.













