
சென்னை, அக். 4- தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் சார்பில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தூய்மையே சேவை 2026 தொடர் தூய்மைப் பணி காந்தி ஜெயந்தி நாளில் நிறைவு பெற்றது.
இதன் நிறைவு விழா மற்றும் காந்தி ஜெயந்தி விழா சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. காந்தியின் உருவப் படத்துக்கு தெற்கு ரயில்வே பொது மேலாளர் யு.சுப்பா ராவ் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விழாவில் அவர் பேசியதாவது: தொடர் தூய்மைப் பணி நாட்களில் தெற்கு ரயில்வே மண்டலத்தில் மொத்தம் 1,851 இடங்களில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன. அதில் 8,274 பேர் ஈடுபட்டனர். தீவிர தூய்மைப் பணி நடைபெற்ற 585 இடங்களில் இருந்து 65 டன் பழைய கழிவுகள் அகற்றப்பட்டன. இப்பணியில் ரயில்வே ஊழியர்கள், அலுவலர்களுடன் மாணவர்கள், பேராசிரியர்களும் ஈடுபட்டனர். தூய்மைப் பணியின்போது 42 மருத்துவ முகாம்கள் மூலம் 572 தூய்மைப் பணியாளர்கள் பயனடைந்தனர்.
அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணத் தொகுப்பும் வழங்கப்பட்டது. பணியின்போது 2,665 கிலோ பழைய இரும்பு மற்றும் தேவையில்லாத பொருட்கள் கலைப் பொருட்களாக மாற்றப்பட்டன. கடந்த அக்.1-ம் தேதி ஒரே நாளில் தெற்கு ரயில்வேயில் 2,675 பேர் பங்கேற்ற தூய்மைப் பணியால் 1.20 டன் குப்பைகள் அகற்றப்பட்டன. தெற்கு ரயில்வேயில் ஆண்டு முழுவதும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினரின் தேச பக்திப் பாடல்கள், நடனம், ரயில்வே பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், அவர்களது ஓவியக் கண்காட்சி, தூய்மை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், நாடகம், மேஜிக் நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பங்கேற்ற அனை வருக்கும் சான்றிதழ், சணல் பைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் பொதுமேலாளர் விபின்குமார், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங், கூடுதல் கோட்ட மேலாளர் அங்கூர் சவுகான், ஐ.செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தெற்கு ரயில்வேயில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 31.40 லட்சம் டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. இது 2025 செப்டம்பர் வரையிலான அளவை விட 3 சதவீதம் அதிகம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.













