
புதுடெல்லி: அக். 7-
மேற்கு வங்கத்தில் ஆட்சியை இழந்த மம்தா பானர்ஜி, தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவர் நவீன் பட்நாயக், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரைச் சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளார்.
இண்டியா கூட்டணியில் இருந்து பிரிந்த திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை மீண்டும் அந்த அணியில் இணைப்பது மம்தாவின் நோக்கமாக உள்ளது. ஒடிசாவில் பிஜேடியையும் கூட்டணியில் சேர்க்க அவர் முயற்சி மேற்கொண்டு வருகிறார்.
தேசிய அளவில் பாஜகவை எதிர்த்து ஒன்றிணைய விரும்பும் பல கட்சிகள், தங்கள் சொந்த மாநிலங்களில் ஒருவருக்கொருவர் எதிராகத் தேர்தலில் போட்டியிடும் சூழல் நிலவி வருகிறது. இந்த முரண்பாட்டைக் கடந்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க மம்தா முயற்சி செய்கிறார்.
இண்டியா கூட்டணியில் இருந்து வெளியேறிய அரவிந்த் கேஜ்ரிவால் தொடக்கம் முதலே மம்தாவுடன் நட்புறவில் உள்ளார். எனவே, அவரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவருவது பெரிய காரியமல்ல என மம்தா கருதுகிறார். பிஜேடி கடந்த காலங்களில் தனித்து செயல்பட்டு வந்தாலும், அதன் தலைவர் நவீன் பட்நாயக்குடன் மம்தாவுக்கு நல்ல நட்புறவு உள்ளது.













