
சென்னை: அக். 8-
தஞ்சாவூர், கோவையில் கைது செய்யப்பட்ட மக்சூத் அலி (21), யாசர் அப்துல் (44), உமர் முக்தர் (40), ஜாகீர் உசேன் (38), அப்துல் (43), ஷேக் பரீத் (35), சம்சுதீன் (44) உள்ளிட்டோருக்கு, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியதும் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மக்சூத் அலி, கோவையில் கூலி வேலை செய்வது போல தங்கி, பயங்கரவாத செயல்களுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவரை, தமிழக பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாரின் உதவியுடன், உத்தரப் பிரதேச போலீசார் கடந்த செப்டம்பரில் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து, கடந்த 1-ம் தேதி தஞ்சாவூரில் தங்கி இருந்த யாசர் அப்துல், உமர் முக்தர், ஜாகீர் உசேன், அப்துல், ஷேக் பரீத், சம்சுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில், தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தஹ்ரீர் உள்ளிட்ட அமைப்புகளின் புத்தகங்கள், மொபைல் போன்கள், ‘பென் டிரைவ்’ உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதேபோல், கர்நாடகத்திலும் இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.அதிகாரிகள் கூறியதாவது: பாகிஸ்தானைச் சேர்ந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட ரவுடி ஷாசாத் பட்டி (45), பாடகர் போல சமூக வலைதளங்களில் விடியோக்களை வெளியிட்டு, தன்னிடம் சிக்கும் நபர்களை மூளைச்சலவை செய்து வந்தார். பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நிதியுதவியுடன், ‘ஷாசாத் பட்டி நெட்வொர்க்’ அமைப்பை தொடங்கி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். சுதந்திர தின விழாவை சீர்குலைக்க 14 மாநிலங்களில் இக்கும்பல் சதி திட்டம் தீட்டியதாகவும், இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தவும், சூரிய ஒளித் தகடுகள் மூலம் இயங்கும் கண்காணிப்பு கேமராக்களால் ரகசிய தகவல்களை சேகரிக்கவும் இக்கும்பல் செயல்பட்டது கண்டறியப்பட்டதாக கூறினர். கைது செய்யப்பட்டவர்கள் அந்த நெட்வொர்க்கின் உறுப்பினர்கள் என்றும், தாக்குதல் நடத்த சதி செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.













