
இஸ்லாமாபாத்: அக். 9-
சவுதி அரேபியாவுடன் புதிதாகச் செயல்பாட்டுக்கு வந்துள்ள மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று வான்வழித் தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், சவுதி அரேபியாவில் சுமார் 8,000 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் மத்திய கிழக்கு பிராந்திய மோதலில் பாகிஸ்தானும் நேரடியாகக் களமிறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
‘நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியின்படி, சவுதி அரேபியாவுக்கு வழங்கப்படும் ராணுவ ஆதரவை இஸ்லாமாபாத் தீவிரப்படுத்தியுள்ளது என பாகிஸ்தான் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாகிஸ்தான் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தியதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்தத் தகவலை பாகிஸ்தான் தகவல் தொடர்பு அமைச்சகம் மறுத்துள்ளது. ஹவுதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் போர் விமானங்கள் பயன்படுத்தப்படவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
அதேவேளையில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஏற்கெனவே சவுதி அரேபியாவில் தங்கியிருப்பதை, பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சவுத்ரி, சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக வீரர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை அவர் வெளியிடவில்லை.
இதற்கிடையே, ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், சவுதியில் வசிக்கும் இந்தியர்கள் தற்போதைய பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்கவும், உள்ளூர் அதிகாரிகள் வெளியிடும் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. தற்போதைய சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் அல்லது செய்திகளை சமூக வலைதளங்களில் பகிரவோ, மறுபதிவு செய்யவோ வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.













