
மாமல்லபுரம், அக். 11-
மாமல்லபுரம் அருகே திருவிடந்தை கடற்கரையில், ஸ்பேஸ் சோன் இந்தியா மற்றும் மார்ட்டின் குழுமம் இணைந்து உருவாக்கிய ‘ரூமி ட்வின்’ இரட்டை ராக்கெட் திட்டத்தின் கீழ், ரூமி-1 ராக்கெட் நேற்று காலை 7.40 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
தொழில்நுட்பக் காரணங்களால் ரூமி-2 ராக்கெட் ஏவப்படவில்லை. நிகழ்ச்சியில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்றார். செங்கல்பட்டு மாவட்டம் தையூரில் செயல்பட்டு வரும் ஸ்பேஸ்சோன் இந்தியா நிறுவனத்தை இளம் விஞ்ஞானி ஆனந்த் மேகலிங்கம் நடத்தி வருகிறார்.
தனியார் விண்வெளித் தொழில்நுட்ப ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, ஒரே திட்டத்தில் 2 ராக்கெட்டுகளை உருவாக்கி ஏவும் முயற்சியாக ‘ரூமி ட்வின் மிஷன்’ வடிவமைக்கப்பட்டது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. சந்திரயான் திட்டத்தின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரையின் ஆலோசனைகளும் இந்த முயற்சியில் இடம்பெற்றன.இத்திட்டத்தின் கீழ் ரூமி-1, ரூமி-2 என 2 ராக்கெட்டுகள் உருவாக்கப்பட்டன.
ஹைபிரிட் உந்துவிசை தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இவை, மறுதொடக்க இயக்க அமைப்பையும் கொண்டுள்ளன. தலா 3.1 மீட்டர் நீளம், 164 மில்லிமீட்டர் விட்டம், 35 கிலோ எடை கொண்ட இந்த ராக்கெட்டுகள், 100 செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் வகையில் உருவாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இஸ்ரோவின் அனுமதியுடன் திருவிடந்தை கடற்கரையில் ஏவுதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக ஏவுதளம் திருவிடந்தைக்கு மாற்றப்பட்டது. ராக்கெட்டின் செயல்பாடுகள் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தனியார் வளாகத்தில் கணினி மூலம் கண்காணிக்கப்பட்டன.













