
மும்பை, அக். 11-
இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இதற்கு ஆதரவாக மும்பையில் உள்ள ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றனர். இந்தப் போராட்டம் பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி கலந்து கொள்ள இருந்தார். இந்த நிலையில், பாந்திரா பகுதியில் சென்றுகொண்டிருந்த துஷார் காந்தியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் டி.என். நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கவில்லை. எனவே, அங்கு போராட்டம் நடத்தச் சென்ற துஷார் காந்தியை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததாக கூறப்படுகிறது. துஷார் காந்தி கைது செய்யப்பட்டதற்கு ஆதித்ய தாக்கரே உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதேபோல், மும்பை தாதரில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.













