
புதுடெல்லி, அக். 11-
சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தையும் இயக்கத்தையும் அஜிங்கிய ஷிண்டே வழிநடத்த உள்ளார். இதுதொடர்பாக அபிஜித் திப்கே வெளியிட்ட வீடியோவில், “நானும், சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரும் கைது செய்யப்பட்டுவிட்டோம். நாங்கள் இல்லாத நேரத்தில், அஜிங்கிய ஷிண்டே (35) போராட்டத்தையும் சிஜேபி இயக்கத்தையும் முன்னின்று வழிநடத்துவார். அவரைப் பின்பற்றுங்கள்” என்று தெரிவித்துள்ளார். அஜிங்கிய ஷிண்டே, அபிஜித் திப்கேவின் மிக நெருங்கிய நண்பர் ஆவார். மகாராஷ்டிர மாநிலம் லத்தூரைச் சேர்ந்த ஷிண்டே, பி.டெக். படித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் சமூக வலைதளப் பிரிவில் திப்கேவும் ஷிண்டேவும் ஒன்றாகப் பணியாற்றியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டது. மகாராஷ்டிர ஆம் ஆத்மி கட்சியின் இளைஞர் பிரிவு ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றிய ஷிண்டே, தற்போது சிஜேபியின் மூத்த தலைவராக உள்ளார்.













