Home செய்திகள் தேசிய செய்திகள் ரூபாய் சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை

ரூபாய் சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை

புதுடில்லி, அக். 11-
ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.97 என்ற நிலையை நோக்கி இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில், மேலும் சரிவைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் டாலர் தேவையை நேரடியாகப் பூர்த்தி செய்யும் வகையில், ரிசர்வ் வங்கி புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான அமெரிக்க டாலர்களை, குறிப்பிட்ட வங்கிகள் மூலம் நேரடியாக ரிசர்வ் வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். இதனால் பொதுச் சந்தையில் டாலருக்கான தேவை குறைந்து, ரூபாயின் மதிப்பு உடனடியாக மேலும் சரிவதைத் தடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாயின் மதிப்பைத் தக்கவைக்க, ரிசர்வ் வங்கி தனது கையிருப்பில் உள்ள அமெரிக்க டாலர்களை அதிக அளவில் பொதுச் சந்தையில் விற்று வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகர்களுக்கான அன்னியச் செலாவணி கட்டுப்பாட்டு விதிமுறைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன.முறையான வணிக ஆதாரங்கள் இன்றி மேற்கொள்ளப்படும் டெரிவேட்டிவ் பரிவர்த்தனைகளுக்கான உச்சவரம்பு 100 மில்லியன் டாலரில் இருந்து 5 மில்லியன் டாலராகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதாரமற்ற, அதிக அளவிலான அன்னியச் செலாவணி பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்த முடியும் என ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.