Home செய்திகள் தேசிய செய்திகள் ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய் கப்பல்

ஹார்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடியில் சிக்கிய எண்ணெய் கப்பல்

புதுடில்லி, அக். 12-
அனுமதிக்கப்படாத, ஆபத்தான பாதை வழியாக ஹார்முஸ் ஜலசந்தியை விட்டு வெளியேற முயன்ற கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல், கடல் கண்ணிவெடி மீது மோதி வெடித்துச் சிதறி தீப்பற்றியதாக ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐஆர்ஜிசி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கச்சா எண்ணெய் ஏற்றப்பட்ட பிரம்மாண்டமான சூப்பர் டேங்கர் கப்பல் ஒன்று, அனுமதிக்கப்படாத மற்றும் ஆபத்தான பாதையில் ஹார்முஸ் ஜலசந்தியை விட்டு வெளியேற முயன்றது. அப்போது அந்தக் கப்பல் கடல் கண்ணிவெடி மீது மோதி வெடித்துச் சிதறி தீப்பற்றியது. ஜலசந்தியை விட்டு வெளியேற முயன்றபோதும், கடல் கண்ணிவெடி மீது மோதுவதற்கு முன்பும், அந்தக் கப்பல் தனது வழிசெலுத்தல் அமைப்புகளையும் உலகளாவிய இருப்பிடக் கட்டுப்பாட்டு அமைப்பான ஜிபிஎஸ்ஸையும் அணைத்துவிட்டதாக ஐஆர்ஜிசி தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளை மீற முயலும் எந்தவொரு எண்ணெய்க் கப்பலுக்கும் மிகப்பெரிய தீ காத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்படாத பாதைகளைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு எதிரான நடவடிக்கை ஹார்முஸ் ஜலசந்தியுடன் மட்டுப்படுத்தப்படாது என்றும், ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் அவை பின்தொடரப்பட்டு தண்டிக்கப்படும் என்றும் ஐஆர்ஜிசி கூறியுள்ளது. ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா போர் தொடுத்ததாகவும், இதையடுத்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கப்பல்கள் பயணிக்கும் முக்கிய கடல்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.