
சென்னை, அக். 17-
குழந்தைகளைப் பயன்படுத்தி தவெகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது மலிவான அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், ரசனை குறைந்தது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது. இதுபோன்ற செயலை, தற்போதைய சட்டநிலையில் தேர்தல் வெற்றியை ரத்து செய்வதற்கான காரணமாகக் கருத முடியாது என்றும், இதுதொடர்பாக நாடாளுமன்றம் விரிவாக விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
சேலம் வடக்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ. சிவக்குமாரின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, திமுக வேட்பாளர் ராஜேந்திரன் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். குழந்தைகள் மூலம் அவர்களது வீட்டில் உள்ள பெரியவர்களிடம் முதல்-வர் விஜய்க்கு வாக்களிக்குமாறு கோரப்பட்டதாகவும், இது சட்டவிரோதம் என்பதால் சிவக்குமாரின் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி சிவக்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, தேர்தல் வழக்கைத் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஏப்.21 அன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தவெக தலைவரும், முதல்-வருமான விஜய், குழந்தைகள் தங்களது பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை தவெகவுக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்த வேண்டும் என மறைமுக அழுத்தம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குழந்தைகள் மூலம் பெரியவர்களை வாக்களிக்கச் செய்வதற்கான பிரச்சாரம் உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது பரிசீலிக்கப்பட வேண்டும். எனினும், குற்றச்சாட்டுகள் உண்மை எனக் கொண்டாலும், அது ஊழல் நடைமுறையாகக் கருத முடியாது. அதிகபட்சமாக, குறிப்பிட்ட கட்சிக்கும் வேட்பாளருக்கும் வாக்களிக்க பெரியவர்களை சம்மதிக்க வைக்கும் முயற்சியாகவே பார்க்க முடியும்; வாக்காளர்களின் சுதந்திரமான முடிவெடுக்கும் உரிமை பறிக்கப்பட்டதாகக் கூற முடியாது. குழந்தைகளைப் பயன்படுத்தி காணொளிகளைப் பரப்பியது அருவருப்பானதும், மலிவான அரசியல் உள்நோக்கம் கொண்டதும், பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துவதுமாகும். இதுபோன்ற செயல்களைத் தடை செய்ய வேண்டுமா, அல்லது தேர்தல் வெற்றியை ரத்து செய்வதற்கான காரணமாகக் கருத முடியுமா என்பது குறித்து நாடாளுமன்றம் முடிவு செய்ய வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ், இக்காரணம் மட்டும் தேர்தலை செல்லாது என அறிவிக்கப் போதுமானதல்ல என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.














