
காஷ்மீர், அக். 8-
தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில், பாதுகாப்புப் படையினர் நடத்திய கூட்டு தேடுதல் வேட்டையில் 5 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். குல்காம் மாவட்டத்தில் உள்ள கெரேவன் சத்தர் (Khrewan Chadder) பகுதியில் நடத்தப்பட்ட தீவிர சோதனையின்போது அவர்கள் பிடிபட்டனர்.
அந்தப் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஜம்மு-காஷ்மீர் போலீஸ், ராணுவத்தின் 9 ராஷ்டிரிய ரைபிள்ஸ் (ஆர்.ஆர்.) மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்.) 18-ஆவது பட்டாலியன் ஆகியவை இணைந்து இந்த கூட்டு சோதனையை நடத்தின. கைது செய்யப்பட்ட 5 பேரிடமிருந்து 2 பிஸ்டல்கள், 3 மேகசீன்கள், 40 தோட்டாக்கள் மற்றும் 3 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக குல்காம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் பின்னணி மற்றும் அவர்களின் அடுத்தகட்டத் திட்டங்கள் குறித்து பாதுகாப்புப் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதே கூட்டு சோதனையின் ஒரு பகுதியாக, வடக்கு காஷ்மீரின் ஹந்த்வாரா வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பயன்படுத்திய பழைய பதுங்கு குழியும் கண்டறியப்பட்டது. அந்தப் பதுங்கு குழியை பாதுகாப்புப் படையினர் வெடிவைத்துத் தகர்த்து தரைமட்டமாக்கினர். அங்கிருந்து ஏ.கே.-47 துப்பாக்கி உள்ளிட்ட பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.













