
புதுடெல்லி: அக். 23
பண்டிகைக் காலத்தில் சர்க்கரை விநியோகத்தைச் சீராக வைத்திருக்க, கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்வதற்கான அனுமதியை டிசம்பர் 31-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இந்த அனுமதி முன்பு அக்டோபர் 31-ம் தேதி வரை வழங்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களில் சர்க்கரை விலை சுமார் 30 சதவீதம் அதிகரித்துள்ளது. தீபாவளி நெருங்கும் நிலையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு பொதுமக்களைப் பாதித்துள்ளது. சர்க்கரை மட்டுமின்றி அரிசி விலையும் உயர்ந்துள்ள சூழலில், உணவுப் பொருட்களின் விலை ஏற்றம் தொடர்ந்து நீடிக்கக்கூடும் என்ற ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கையும் கவனம் பெற்றுள்ளது.
எதிர்பார்த்ததைவிடக் குறைந்த உள்நாட்டு உற்பத்தி, பண்டிகைக்கு முன் அதிகரித்த தேவை, கரும்புப் பயிருக்கு ஏற்பட்ட வானிலை பாதிப்பு, உலகளாவிய சர்க்கரை விநியோகத்தில் நிலவும் இறுக்கம், பதுக்கல் உள்ளிட்ட காரணிகளே தற்போதைய விலை உயர்வுக்குக் காரணம் என அரசு தெரிவித்துள்ளது. சந்தை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், நுகர்வோருக்கு போதுமான சர்க்கரை கிடைப்பதையும் விலை நிலைத்தன்மையையும் உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
பதுக்கல் மற்றும் செயற்கையான பற்றாக்குறையைத் தடுக்க, மத்திய, மாநில அரசு அதிகாரிகள் அடங்கிய கூட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் சர்க்கரை ஆலைகள் மற்றும் வியாபாரிகளிடம் உள்ள இருப்பைக் கண்காணித்து வருகின்றன.உள்நாட்டு கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில், கடந்த ஆகஸ்டில் 10 லட்சம் மெட்ரிக் டன் கச்சா சர்க்கரையை வரியின்றி இறக்குமதி செய்ய அரசு அனுமதி அளித்தது. இதுவரை 2.6 லட்சம் மெட்ரிக் டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு கொள்முதல் விலை சாதகமாக இல்லாததால் இறக்குமதி மந்தமாக இருப்பதாக தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. சர்வதேச விலை குறையும் சூழலில் இந்த நீட்டிப்பு பயனளிக்கும் என்றும் அவை கூறின.
நடப்பு ஆண்டில் 343 லட்சம் டன் உற்பத்தி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், போதிய மழையின்மையால் உற்பத்தி 306 லட்சம் டன்களாகக் குறைந்துள்ளது. நாட்டின் ஆண்டு நுகர்வுக்கு சுமார் 280 லட்சம் டன் தேவைப்படும் நிலையில், வழக்கமான கையிருப்பைவிட 30 லட்சம் டன் குறைவாக இருப்பது சந்தைப் பதற்றத்துக்குக் காரணமாகியுள்ளது.














