
புவனேஸ்வர், அக். 29-
வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல், ஒடிசா மாநிலத்தின் தெற்கு பகுதிகளை நோக்கி நகர்ந்ததைத் தொடர்ந்து, மாநில அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசித்த 2,245 கர்ப்பிணிப் பெண்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்புக்காக அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், ‘அர்னாப்’ புயல் அண்டை மாநிலமான ஆந்திராவின் கடலோரப் பகுதியில் நேற்று கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில், ஒடிசா மாநிலம் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்தது. பல பகுதிகளில் புயலின் தாக்கம் காணப்பட்ட போதிலும், அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான மருத்துவ பாதுகாப்பு வழங்கப்பட்டது.வெளியே புயல் கடுமையாக வீசியுக் கொண்டிருந்த அதே இக்கட்டான சூழ்நிலையில், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்களில் 931 பேருக்கு பாதுகாப்பான முறையில் பிரசவம் நடைபெற்றது. அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தன. இதில், கஞ்சம் மாவட்டத்தில் மட்டும் 220 குழந்தைகள் பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த நேரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, அந்தச் சூழ்நிலையை நினைவுகூரும் வகையில் பெற்றோர் பெயர் சூட்டினர். குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கு புயலின் பெயரான ‘அர்னாப்’ என்றும், புயலைக் குறிக்கும் ‘தூபான்’ என்றும் பெயரிட்டனர். பெண் குழந்தைகளுக்கு கனமழையைக் குறிக்கும் வகையில் ‘வர்ஷா’ மற்றும் ‘பதாசி’ என்ற பெயர்கள் சூட்டப்பட்டன. புயல் மற்றும் கனமழை நிலவிய நேரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு, அந்த இயற்கை நிகழ்வுகளை நினைவுபடுத்தும் பெயர்களை பெற்றோர் சூட்டியது குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.s














