
சென்னை: அக். 29-
திமுக ஆட்சிக் காலத்தில் அரசு அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி, தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பான வழக்கு விசாரணை தீவிரமடைந்துள்ளது. இந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் அரசகுமார், திமுக நிர்வாகி முத்துக்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 26-ம் தேதி அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த அரசகுமார், தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய திமுக நிர்வாகி முத்துக்குமார், ஜூன் மாதம் முதல் தலைமறைவாக இருந்தார். வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, அன்பில் மகேஷின் கூட்டாளி எனக் கூறப்படும் சண்முக பிரியாவின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த நிலையில், சுமார் 5 மாதங்களாக தலைமறைவாக இருந்ததாகக் கூறப்படும் முத்துக்குமார், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக அன்பில் மகேஷ் பதவி வகித்த காலத்தில், அவருக்கு மிகவும் நெருக்கமானவராக முத்துக்குமார் வலம் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விருதாச்சலம் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏவான முத்துக்குமார், திமுக ஆட்சிக் காலத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தனியார் பள்ளிகளுக்கு அரசு அனுமதி பெற்றுத் தருவது தொடர்பாக ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் பெறப்பட்டதாகக் கூறப்படும் இந்த வழக்கில், முத்துக்குமாரின் சரண் நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது.













