
அமராவதி: அக். 29-
‘அர்னாப்’ புயல் ஆந்திர மாநிலத்தை நோக்கி நகர்ந்ததைத் தொடர்ந்து, குண்டூர், பாபட்லா, விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம், காக்கிநாடா, கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று முன்தினம் மாலை முதல் பலத்த சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்தது.
புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பல கிராமங்களில் மின் இணைப்பு முன்கூட்டியே துண்டிக்கப்பட்டதுடன், பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. தாழ்வான பகுதிகளில் வசித்த மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற சுமார் 350 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் சுமார் ஒரு லட்சம் பேர் தங்கவைக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணி வரை ஏனாம்–நர்சாபுரம் இடையே அர்னாப் புயல் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 145 முதல் 155 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசியது.
பாபட்லா, விசாகப்பட்டினம், காக்கிநாடா, கோதாவரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின் கம்பங்களும் சேதமடைந்தன. இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் கடலோரப் பகுதிகளில் சாலைகள் சேதமடைந்தன. கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகள், பலகைகள் காற்றில் பறந்தன. பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும் 5 பேர் உயிரிழந்தனர். புயல் காரணமாக 33 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 2 நாட்களுக்கும் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள், காவல் துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள், பேரிடர் மீட்புக் குழுவினருடன் முதல்வர் சந்திரபாபு நாயுடு காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவிட்டார். சுமார் 150 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. வீடுகளை இழந்தவர்களுக்குப் புதிதாக வீடுகள் கட்டித் தரப்படும் என முதல்வர் உறுதியளித்தார். நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு தலா ரூ.1,000 நிதியுதவியுடன் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த சாலைகள், மின் கட்டமைப்புகளைச் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.













