
பெங்களூரு, நவ. 1–
கன்னடக் கொடிக்கு புதிய வடிவம் கொடுத்து தேசியக் கொடிக்கு இணையான அந்தஸ்து வழங்குவதுடன், அனைத்து அரசு அலுவலகங்களிலும் கன்னடக் கொடியை ஏற்றுவது கட்டாயமாக்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கூறினார்.
கன்னட ராஜ்யோத்சவா தினமான இன்று கல்வித் துறை சார்பில் பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் அமைக்கப்பட்ட விழாவில் தேசியக் கொடியேற்றி அவர் பேசியதாவது:
பெலகாவி கூட்டத்தொடரில் சட்டம்
கன்னடக் கொடிக்கு தேசியக் கொடிக்கு இணையான அந்தஸ்து வழங்குவது குறித்து வரவிருக்கும் பெலகாவி சட்டமன்றக் கூட்டத்தொடரில் விவாதித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். கன்னடக் கொடிக்கு தகுந்த அந்தஸ்து வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த முறை மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டும் அது அமலாகவில்லை. எனவே, பெலகாவி கூட்டத்தொடரில் இதற்காக ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.
அரசு அலுவலகங்கள் மீது கன்னடக் கொடி ஏற்றுவது கட்டாயமாக்கப்படும். அதேபோல் தனியார் நிறுவனங்களும் கன்னடக் கொடியை ஏற்ற தயார்படுத்திக் கொண்டுள்ளன. வேறு எந்த மாநிலத்திற்கும் இதுபோன்ற தனிக் கொடி இல்லை. நமக்கு மட்டுமே தனிக் கொடி உள்ளது.தற்போதுள்ள கொடிக்கு புதிய வடிவம் கொடுத்து மஞ்சள், குங்கும நிறத்துடன் மற்றொரு நிறத்தையும் சேர்த்து, நடுவில் கன்னட இலச்சினையைப் (முத்திரை) பொருத்தி புதிய கொடியை உருவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கன்னடக் கொடி எவ்வாறு இருக்க வேண்டும், எந்த முறையில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்பது குறித்து வழிகாட்டுதலையும் பெற்று, பெலகாவி சட்டமன்ற கூட்டத்தொடரிலும், பொதுமக்கள் மத்தியிலும் விவாதித்து கன்னடக் கொடியின் வடிவம் குறித்து தெளிவான முடிவு எடுக்கப்படும்.
கன்னட ராஜ்யோத்சவத்தை முன்னிட்டு அனைத்து கன்னடர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் எந்த நாட்டில் இருந்தாலும் நமது மூச்சு கன்னடமாக இருக்க வேண்டும். இங்கிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் அமைப்புகளை உருவாக்கி கன்னடத்தைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இன்று கன்னட ராஜ்யோத்சவா மட்டுமின்றி, கன்னடத் தாய் புவனேஸ்வரியையும் பூஜிக்கிறோம். ஒரு வகையில் இது மாத்ரு பூஜையாகும்.
தாயை நேசிப்பதும் கன்னட மொழியை நேசிப்பதும் ஒன்றுதான். கன்னட மொழி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்கது. செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுள்ளது. 8 ஞானபீட விருதுகளைப் பெற்றுள்ளது.
15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்
மொழியை நேசித்தால் அது நம்மைக் காப்பாற்றும். ஆயிரக்கணக்கான கன்னடர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ளனர். கலை, அறிவியல், ஐ.டி-பி.டி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் கன்னடம் கோலோச்சுகிறது. கன்னடத்தின் அழிவும் வளர்ச்சியும் குழந்தைகளின் கையில்தான் உள்ளது.
பள்ளிகளில் ஏ.ஐ. (செயற்கை நுண்ணறிவு) கல்வி முறை கொண்டு வரப்படுகிறது. சி.எஸ்.ஆர். (தனியார் நிறுவன சமூகப் பொறுப்பு) நிதி மூலம் கன்னடப் பொதுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். கிராமப்புறப் பள்ளிகள் பெங்களூரு பாணியில் உயர்நிலை பள்ளிகளாக மாற்றப்படும். 15 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
கல்வித் துறையின் சர்வாங்க வளர்ச்சிக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கும் நோக்கம் கொண்டுள்ளோம். கன்னட மொழியும் கன்னடப் பள்ளிகளும் பிழைக்க வேண்டும். கன்னடம் என்பது வெறும் அடையாளமாகி விடக்கூடாது, அது நமது பெருமையாக இருக்க வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா, எம்.எல்.ஏ-க்கள் கணேஷ் ஹுக்கேரி, டாக்டர் கே.கோவிந்தராஜு, ஏ.பி.ரங்கநாத், அரசின் தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜனீஷ், கூடுதல் தலைமைச் செயலாளர் வி.ரஷ்மி மகேஷ், கல்வித் துறை ஆணையர் வித்யாகுமாரி, காவல் துறை தலைமை இயக்குநர் சலீம், காவல் ஆணையர் சீமந்த்குமார் மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
சிறப்புத் திட்டங்கள் தொடக்கம்
கன்னட ராஜ்யோத்சவா தினமான இன்று துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மக்கள் நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.
பெங்களூரு கண்டீரவா மைதானத்தில் நடைபெற்ற விழாவில், 8, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கிராமப்புற வாழ்வியல் அனுபவத்தை வழங்கும் ‘கிராமானுபவா’ திட்டத்தையும், கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கி போட்டித் தேர்வுகளுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி அளிக்கும் ‘சி.எம். வித்யார்த்தி ஹஸ்தா’ திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
மேலும் இதே விழாவில், அரசு மருத்துவமனைகளைத் தத்தெடுக்கும் திட்டத்தையும் முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தொடங்கி வைத்தார்.
















