Home செய்திகள் தேசிய செய்திகள் ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்கு

ரூ.1,614 கோடி கொரிய முதலீடுகள் ஆந்திராவுக்கு

அனந்தபூர், நவ. 2-
தமிழ்நாட்டுக்கும் ஆந்திரப் பிரதேசத்துக்கும் இடையே பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதில் போட்டி நிலவி வரும் நிலையில், ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களுக்கு வாகன உதிரிபாகங்களை வழங்கும் மூன்று முன்னணி தென் கொரிய நிறுவனங்கள் தங்களது விரிவாக்கத் திட்டங்களுக்கு தமிழ்நாட்டுக்குப் பதிலாக ஆந்திரப் பிரதேசத்தைத் தேர்வு செய்துள்ளன.கொரியாவைச் சேர்ந்த ஹ்வாஷின், செஷான், ஐவாமெட் ஆகிய நிறுவனங்கள் ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் மொத்தம் ரூ.1,614 கோடி முதலீடு செய்ய மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
ஹ்வாஷின் நிறுவனம் ரூ.850 கோடியும், செஷான் நிறுவனம் ரூ.514 கோடியும், ஐவாமெட் நிறுவனம் ரூ.250 கோடியும் முதலீடு செய்ய உள்ளன. இந்தத் திட்டங்களின் மூலம் மொத்தம் 1,418 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நிறுவனங்களும் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களுக்கு வாகன உதிரிபாகங்களை வழங்கி வருகின்றன. அவற்றைத் தமிழ்நாட்டில் ஆலைகள் அமைக்கச் செய்வதற்குத் தமிழகத் தொழில்துறை தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த முதலீடுகள் ஆந்திரப் பிரதேசத்துக்குச் சென்றிருப்பது தமிழ்நாட்டுக்கு பின்னடைவாகக் கருதப்படுவதாக ‘எக்கனாமிக் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முதலீடுகள் மூலம் அனந்தபூர் மாவட்டம் தென்னிந்தியாவின் முக்கிய ஆட்டோமொபைல் உற்பத்தி மையமாக உருவெடுக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஆந்திரப் பிரதேச அமைச்சர் நர லோகேஷ் தென் கொரியாவுக்குச் சென்று இந்நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்தப் பேச்சுவார்த்தைகள் தற்போது முதலீட்டு ஒப்பந்தங்களாக மாறியுள்ளன.