Home மாவட்டங்கள் சென்னை 110 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்க ஆலோசனை

110 மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்க ஆலோசனை

சென்னை, நவ. 2-
திமுகவில் 110 மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்களை விரைவில் நியமிக்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சியை இழந்த நிலையில், கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் மறுசீரமைப்புக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் தமிழகம் முழுவதும் ஆய்வு செய்து, கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை சமர்ப்பித்தனர்.
அதன் அடிப்படையில் நடைபெற்ற தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில், திமுக மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்படும், மாவட்டச் செயலாளர்களின் அதிகபட்ச வயது 70 ஆக நிர்ணயிக்கப்படும், ஒருவர் அதிகபட்சம் 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளர் பதவியில் இருக்க முடியும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த நிலையில், திமுக தலைமை அலுவலகத்தில் நேற்று மறுசீரமைப்புக் குழுவினருடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அடுத்ததாக நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு முன்பாக திமுகவின் உட்கட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் எனக் கூட்டத்தில் திட்டமிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக வட்டாரங்கள் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் திமுக தொண்டர்களை சோர்வடையச் செய்திருந்தன.
அதன்பிறகு ஆளுங்கட்சியினர் தங்களது தலைவர்களைக் கைது செய்ததும், கடுமையான விமர்சனங்களை முன்வைத்ததும் தொண்டர்களிடம் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தின. இதனால், நடந்து முடிந்த இடைத்தேர்தலில் திமுகவினர் தீவிரமாகப் பணியாற்றினர்.
குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதன் மூலம், இன்னும் கூடுதலாக உழைத்தால் அக்கட்சியை வீழ்த்தலாம் என்ற நம்பிக்கை திமுக தொண்டர்களுக்கு ஏற்பட்டுள்ளது.